பா.ஜ.க. எம்பியும், நடிகையுமான கங்கனா ரணாவத், டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்ட வீடியோக்களைக் குறிப்பிட்டு, தற்போதைய ஜென் இசட் இளம் தலைமுறையினரை “சாக்கடைத் தலைமுறை” என்று கடுமையாக விமர்சித்துள்ளது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் போராட்டங்களின் போது, இளைஞர்கள் பயன்படுத்திய மொழி மற்றும் அவர்களின் செயல்பாடுகள் தனக்கு வாந்தி வருவது போல் இருந்ததாகவும், இளைய தலைமுறையினர் வளர்ப்பு முறை பற்றியும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் தொடர்பான வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, அதில் கீழ்வரும் கருத்துகளை குறிப்பிட்டுள்ளார்.
“என் வாழ்நாளில் ஒரே இடத்தில் இவ்வளவு அசிங்கத்தை நான் கண்டதில்லை. ஜென் Z தலைமுறையின் போராட்டக் காட்சிகள் வாந்தி வரவைப்பவையாக உள்ளன. அவர்கள் பேசும் விதமும், பயன்படுத்தும் மொழியும்... என் வாழ்நாளில், ஒவ்வொரு காட்சியிலும் உள்ள அனைத்தும் ஒரே நேரத்தில் இவ்வளவு உறுத்தலாகவும், இவ்வளவு அநாகரிகமாகவும் இருப்பதை நான் கண்டதில்லை.
இந்தியா என்பது நேர்த்தியால் போர்த்தப்பட்ட, பண்பாட்டு நுட்பத்தில் வேரூன்றிய, பலதரப்பட்ட அழகான மக்கள் வாழும் ஒரு நாடு. நீங்கள் உங்களைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைத்துக்கொள்கிறீர்கள், மேலும் அவற்றைப் போலவே தோற்றமளித்து, நடந்து கொள்கிறீர்கள். இதில் எந்த முரண்பாடோ அல்லது எதிர்நிலையோ இல்லை; வெறுமனே உங்கள் அழுக்கு, குப்பை மற்றும் அசிங்கத்தை இந்த உலகின் மீது திணிக்கிறீர்கள்.
இந்த வீடியோக்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது. எனக்குச் சிறிது ஆறுதல் தேவை, டிஜிட்டல் டிடாக்ஸ்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெண்கள் குறித்துப் பேசியுள்ள அவர்,
“இங்கே மேற்கத்தியமயமாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு புதிய தலைமுறை இந்தியப் பெண்கள் இருக்கிறார்கள். நான் அவர்களை 'சாக்கடைத் தலைமுறை' என்று அழைக்கிறேன்.
இவர்களில் சிலருக்கு இந்த சமூகத்திற்கு வழங்குவதற்கு எதுவுமில்லை, படிப்பிலும் சிறந்து விளங்குவதில்லை. ஆனால் அவர்கள் மிகவும் மோசமானவர்களாகவும், ஒழுக்கக்கேடானவர்களாகவும் இருப்பதால் அவர்களால் இல்லத்தரசிகளாகவும் இருக்க முடியாது.
ஆனால், போதைப்பொருள் பயன்படுத்துவதற்கும், மது அருந்துவதற்கும் அல்லது எல்லையற்ற உடலுறவுத் துணைகளைக் கொண்டிருப்பதற்கும் தங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை பெருமையாக கூறிக்கொள்கிறார்கள்.
மேலும் வெட்கமில்லாமல் தங்கள் பெற்றோரின் வருமானத்தில் வாழ்கிறார்கள். உண்மையில் சுயசார்பு இல்லாமல், சுதந்திரமான வாழ்க்கை வாழ்வதற்காகத் தொடர்ந்து போராடுகிறார்கள்.
ஒரு கனிவான நினைவூட்டல்: சுதந்திரமான வாழ்க்கை என்பது உழைப்பால் சம்பாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பொறுப்புக்கூறல் (பொறுப்புணர்வு) இல்லாமல் நீங்கள் சுதந்திரமாக வாழ முயன்றால், நீங்கள் வெறும் சீரழிந்த வடிவமே. சாக்கடை நபர்.”எனக் குறிப்பிட்டுள்ளார்.