பெண்ணை தெய்வமாக வேண்டாம், பெண் பெண்ணாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் இங்கிருக்கும் பலரின் கோரிக்கை. காரணம்...
இந்தியாவில் பெரும்பாலானோர் பின்பற்றும் மதம் இந்து மதம். மற்ற மதங்களைவிட இந்து மதத்தில்தான் அதிக பெண் தெய்வங்கள் இருப்பார்கள். அதுவும் பெண் தெய்வங்கள் 'சக்தி'யின் வடிவங்களாகப் போற்றப்படுகின்றனர்.
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களுக்கும் ஆதாரமாக விளங்கும் மும்மூர்த்திகளுக்கு இணையாக 'முப்பெரும் தேவியர்' வழிப்படப்படுகின்றனர்.
அப்படிப்பட்ட இந்த நாட்டில் பெண்களின் நிலை என்னவென்று கேட்டால்.... காவித் துப்பட்டா அணிந்துகொண்டே பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்துவர்.
பீகார் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் நெஞ்சை நடுங்க வைக்கிறது. ஒரு பெண்ணாக அந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு உள்ளுக்குள் என்ன நடுக்கம் ஏற்பட்டிருக்கும் என்பதை பெண்கள்தான் அறிவர்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாலந்தாவில் உள்ள நூர்சராய் காவல் நிலையப் பகுதியில், பெண் ஒருவரை ஒரு கும்பல் சேர்ந்து பாலியல்ரீதியாக துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அப்பெண்ணை இழுத்துவரும் ஒருவன் அவளின் மார்பை பிடித்து துன்புறுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்பெண் தன் இரு கைகளாலும் மார்பினை மறைத்து வந்தாலும், அப்பெண்ணை இழுத்துவந்த ஆணிண் கைகள் அவள் மார்பு மேலேயே உள்ளது.
ஒரு கும்பலே ஒரு பெண்ணை பாலியல்ரீதியாக துன்புறுத்தியுள்ளது. அதுவும் பொது சாலையில். அதனை வீடியோவும் எடுத்துள்ளனர். அதனை சமூக வலைதளங்களிலும் அவர்களே பகிர்ந்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.
காவல்துறையின் கூற்றுப்படி, மார்ச் 26 ஆம் தேதி மாலையில் அவர் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருமணமான அப்பெண் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் அப்பெண்ணை இழுத்துச் சென்று பாலியல்ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். அப்பெண் கூச்சலிட கிராமவாசிகள் தலையிட்டு அவரை மீட்டுள்ளனர்.
தொடர்ந்து 27ஆம் தேதி அப்பெண் அளித்த புகாரில் முக்கிய குற்றவாளிகளான அசோக் யாதவ் மற்றும் மஹாலு மாத்தோ என்ற நவ்நீத் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மூன்றாவது குற்றவாளியான ரவிகாந்த் குமாரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளனர்.
போலீசார் குற்றவாளிகள் மூன்றுபேர் என தெரிவித்துள்ளனர். ஆனால் வீடியோவில் அப்பெண்ணை சுற்றி ஏராளமானோர் இருக்கின்றனர். அவரை அரைநிர்வாணமாக்கி, சிறிதும் குற்ற உணர்வோ, எவ்வித உணர்ச்சியும் இல்லாதவர்கள்போல சுற்றி நின்று சிரிக்கின்றனர். இதை பார்ப்போருக்கே நெஞ்சின் நடுக்க குறையவில்லை. அப்போது அப்பெண்ணின் மனநிலை?
இதுபோன்ற சம்பவம் இங்கு நடைபெறுவது புதிதல்ல என்று சொல்லும் அளவிற்குதான் தற்போதைய நிலை உள்ளது.
மணிப்பூரில் இருபெண்கள் நிர்வாணமாக்கப்பட்டதற்கே இன்னும் தண்டனை கிடைக்காதபோது, பாலியல் குற்றவாளிக்கு ஜாமின் வழங்கப்படும்போது, ஒரு பெண்ணை ஒரு கும்பலே சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஜாமினில் வெளிவரும்போது ஆரத்தி எடுக்கும் நிலை உள்ளபோது, காவி உடை அணிந்துகொண்டு கடவுள் என்ற பெயரில் பெண்களை போகப்பொருளாக்கும் ஆசாமிகள் இருக்கும்போது, அவர்களை ஒரு கூட்டமே வழிபடும் வரை, பெண் கடவுளாகவே இருந்தாலும் இதுபோன்ற கொடூரங்கள் தொடரும் என்பதில் ஆச்சர்யமில்லை.