மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி இரவு மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து விழுந்து திஷா சாலியன் உயிரிழந்தார்.
தீஷா உயிரிழந்த 6 நாட்களுக்கு பிறகு நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்ராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தற்கொலை செய்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
பட வாய்ப்புகள் இல்லாமல் போனது அவரது தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்டது. அதேநேரம் சுஷாந்தின் முன்னாள் காதலி மற்றும் நடிகை ரியா சக்கரபர்த்தி அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் பணத்தை கையாடல் செய்ததாவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சிபிஐ நடத்திய 5 ஆண்டு விசாரணைக்கு பின் ரியா நிரபராதி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனிடையே சுஷாந்த் தற்கொலை செய்துகொள்வதற்கு 6 நாட்களுக்கு முன் 26 வயதான அவரின் மேலாளர் திஷா சாலியன் 14 வது மாடியில் இருந்து விழுந்து இறந்ததன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பின.
அவர் தற்கொலை செய்ததாக மும்பை போலீஸ் தனது விசாரணைக்கு பின் தெரிவித்தது.
ஆனால் திஷாவின் தந்தை சதீஷ் சாலியன் தன் மகள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டி, அவரது தந்தை கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான முந்தைய விசாரணையில் திஷா சாலியன் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், அவரது குடும்பத்தினருக்கு உடற்கூறாய்வு அறிக்கை நகல்கள் வழங்கப்படாததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும் பெற்றோர் முன்வைத்த கொலை குற்றச்சாட்டு தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படாதது குறித்தும் காவல்துறையை கண்டித்தனர்.
இதைதொடர்ந்து நேற்று நடந்த விசாரணையில் நீதிபதிகள் சாரங் கோட்வால் மற்றும் ரஞ்சித்சிங் ராஜா போன்ஸ்லே ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது, திஷா சாலியன் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
எப்ஐஆர் பதிவு செய்து அதிகாரியை நியமித்து விசாரணையை தொங்க சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் சதீஷ் சாலியனின் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது
மேலும் எந்தவொரு நபர் மீதும் போதுமான ஆதாரங்களை விசாரணை அதிகாரி கண்டறியும் வரை, யாரையும் குற்றவாளியாகக் கருதக்கூடாது என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியினர்.