மகாராஷ்டிராவில் உடல் ஊனமுற்ற டெலிவரி ஊழியர் ஒருவர் ஆர்டர் செய்யப்பட்ட உணவை டெலிவரி செய்வததற்காக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு சென்றபோது, வாடிக்கையாளர் உணவை வாங்குவதற்காக கீழே வர மறுத்துவிட்டு ஆர்டரை ரத்து செய்த சம்பவம் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகராஷ்டிராவில் உள்ள சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனத்தில் உடல் ஊனமுற்ற நிஹிர் என்பவர் உணவு டெலிவரி வேலை செய்து வந்தார்.
இவரது கால்கள் ஊனமுற்ற நிலையில் இருந்த போதிலும், உழைத்து சாப்பிட வேண்டும் என்ற மன உறுதியுடன் உணவு டெலிவரி வேலையை செய்து வந்தார்.
இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடிக்கையாளர் ஒருவர் ரூபாய் 50 மதிப்புள்ள மேகி உணவை சொமேட்டோவில் ஆர்டர் செய்துள்ளார்.
இந்த ஆர்டரை எடுத்த நிஹிர், உணவை டெலிவரி செய்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது அவர் டெலிவரிக்கான இருப்பிடத்தை அடைந்தபோது, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த வாடிக்கையாளரிடம், தன்னால் மேலே வர இயலாமல் உள்ளதால் உணவை கீழே வந்து வாங்குமாறு கூறியுள்ளார்.
ஆனால் வாடிக்கையாளரோ கீழே வந்து வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு, தான் டெலிவரிக்காக கூடுதலாக பணம் செலுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அதனால் நான் ஏன் கீழே இறங்கி வரவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து வேறு வழியில்லாமல் ஆர்டர் செய்யப்பட்ட உணவை டெலிவரி செய்வதற்காக தனது ஊன்றுகோலை கீழே வைத்துவிட்டு, மாடிப்படிகளில் சிரமப்பட்டு ஏறி நிஹிர் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து நிஹிர் மேலே ஏறி வாடிக்கையாளரின் வீட்டிற்கு முன்பு சென்றபோது, வாடிக்கையாளர் ஆர்டரை கேன்சல் (ரத்து) செய்துள்ளார்.
இதைப்பார்த்து மன உளைச்சலுக்கு உள்ளான நிஹிர், தான் மேலே ஏறி வருவதற்கு சிறிது காலதாமதமானதால், அதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் வாடிக்கையாளர் ஆர்டரை ரத்து விட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இதையடுத்து நிஹிர் பதிவிட்ட வீடியோ, இணையத்தில் விவாதங்களை எழுப்பியது.
இதுகுறித்து பதிவிட்ட பயனர்கள், ஒரு சேவைக்கு பணம் செலுத்துவதால், அதனை வழங்குவபர்களை வாடிக்கையாளர்கள் அவமானப்படுத்தவோ அல்லது மனிதாபமற்ற முறையில் நடத்தவோ கூடாது என பதிவிட்டனர்.
மேலும் இந்த சம்பவம் மனதை நொறுக்குவதாக உள்ளதாகவும், இந்த கடினமான சூழ்நிலையிலும் மன உறுதியுடன் வேலை செய்து வரும் தங்களுக்கு வலிமை கிடைக்கட்டும் எனவும் பயனர்கள் பதிவிட்டனர்.