தேர்தல் ஆணையத்தை மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை 'வனிஷ் குமார்' என்று கேலியாக கேலியாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, வங்கத்தில் ஆட்சிக்கு வருவதற்காக பாஜகவின் அறிவுறுத்தல்களின் பேரிலேயே தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்கத்தில் 92 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து வேண்டுமென்றே நீக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எஸ்ஐஆர் நடவடிக்கை கிராமவாசிகள், பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் குறிவைத்தது என்றும் சட்டப் போராட்டங்கள் மூலம் உண்மை வெளிக்கொணரப்படும் என்றும் கூறினார்.
எஸ்ஐஆர் செயல்முறைக்கு எதிராக முதலில் முன்வந்து சட்டப் போராட்டத்தைத் தொடங்கிய கட்சி திரிணாமுல் காங்கிரஸ்தான் என்றும், முறைகேடுகளை நிரூபிக்கும் புகைப்படங்களும் ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும் மம்தா தெரிவித்தார்.
ஆட்சிக்கு வந்த முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசை சாடிய அவர், 'தேனிலவு' காலத்திற்குப் பிறகு, அவர்கள் இப்போது 'பண நிலவு' காலத்தில் இருப்பதாகவும், டெல்லியில் ஆட்சியின் அடித்தளம் ஆட்டம் கண்டு வருவதாகவும் அவர் எச்சரித்தார்.
குற்றச்சாட்டுகளை நிராகரித்த தேர்தல் ஆணையம், விதிகளின்படி போலி வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள் மற்றும் வசிப்பிடத்தை மாற்றியவர்களை நீக்குவதற்காக மட்டுமே சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டதாகவும், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் முறையான நேரடிச் சோதனையை நடத்தியதாகவும் தெளிவுபடுத்தியது.
இதனிடையே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையின் போது, இரண்டு தேர்தல் ஆணையர்கள் தங்கள் பெயர்களில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.
இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன.