இந்தியா

ராஜஸ்தான்: நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதிய விபத்தில் 9 பேர் பலி

ஓட்டுநர் வாகனம் ஓட்டும்போது தூங்கியிருக்கலாம் என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள ஷம்புபுரா அருகே, கோட்டா-உதய்பூர் தேசிய நெடுஞ்சாலையில், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22, 2026) அதிகாலை 2 மணியளவில், மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் அதிவேக க்ரூஸர் வாகனம், நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில், அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-உதய்பூர் தேசிய நெடுஞ்சாலையில், ஷம்புபுரா அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது அதிவேகமாக வந்த க்ரூசர் வாகனம் மோதியதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் ஒரு கூட்டுக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் சிகார் மாவட்டத்தில் உள்ள காது ஷியாம்ஜி கோவிலில் பிரார்த்தனை செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையின் முதற்கட்ட அறிக்கை

கோட்டா நகர காவல் கண்காணிப்பாளர் தேஜேஸ்வனி கௌதம், மற்ற அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்று, வாகனத்திற்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சிகளை மேற்பார்வையிட்டார். இந்த காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் க்ரூஸர் ஓட்டுநர் வாகனம் ஓட்டும்போது தூங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரி ஓட்டுநரான ஹரூன், ஒரு கோளாறைச் சரிபார்ப்பதற்காக சாலையோரம் லாரியை நிறுத்தியிருந்ததாகவும், சிறிது தூரத்தில் நின்றுகொண்டிருந்தபோது அதிவேகமாக வந்த க்ரூஸர் வாகனம் லாரியின் மீது மோதியதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சாலையிலிருந்து சுமார் 20 அடி தூரம் தூக்கி எறியப்பட்டதாகவும், 10 நிமிடங்களுக்குப் பிறகு சுயநினைவு பெற்றதாகவும், தானே காவல்துறைக்கும் ஆம்புலன்ஸுக்கும் அழைப்பு விடுத்ததாகவும், மேலும் தனது முழங்கால்களிலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

SCROLL FOR NEXT