இந்தியா

கேரளத்தில் 6-ந்தேதி ஓட்டல்கள் மூடப்படும் - உரிமையாளர்கள் அறிவிப்பு

சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக தற்போது குறைவான நிறுவனங்களே இயங்கி வருகிறது.

வணிக சிலிண்டர் விலை ரூ.993 உயர்த்தப்பட்டது வணிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், இதன்மூலம் உணவுப் பொருட்களின் விலை உயரும் என்றும் வணிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 6-ந் தேதி ஓட்டல்கள் மற்றும் உணவகங்களை மூடப்போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜூ அப்சரா கூறியிருப்பதாவது:-

19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.3 ஆயிரத்து 85 ஆக உயர்ந்து இருப்பது ஓட்டல் மற்றும் கேட்டரிங் துறைக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது. அதிகரித்து வரும் பல்வேறு செலவுகளால் தாங்கள் ஏற்கனவே போராடி வரும் நிலையில் திடீரென ஏற்பட்ட சிலிண்டர் விலை உயர்வு நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.

ஏற்கனவே சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக தற்போது குறைவான நிறுவனங்களே இயங்கி வருகிறது. இந்த நிலையில் சிலிண்டர் விலை ஏற்றப்பட்டு இருப்பது ஓட்டல்கள் மற்றும் உணவகங்களை மூடும் நிலைக்கு தள்ளி உள்ளது. சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 6-ந்தேதி கேரளம் மாநிலம் முழுவதும் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களை மூட உள்ளோம். சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் மேலும் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT