டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கைக்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரியும் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வலியுறுத்தி சிஜேபி கட்சி இன்று (அக்டோபர் 10) 'சலோ டெல்லி' என்ற பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
சிஜேபி அறிவிப்பை தொடர்ந்து, தேசிய தலைநகர் டெல்லியில் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் அமலில் உள்ளதாகவும், அனுமதியற்ற கூட்டங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்தது.
இதையடுத்து டெல்லிக்கு செல்லும் பல ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 20,000 அதிகமான காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், விமான போக்குவரத்திற்கான கடைசி நேர முன்பதிவுகளின் விலை அதிரித்து காணப்பட்டது.
வாரணாசியில் இருந்து டெல்லி செல்லும் ஸ்பாட் கட்டணங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட 15% உயர்ந்தது.
அமிர்தசரஸில் இருந்து புறப்படும் விமானக் கட்டணங்கள் சுமார் ரூ.4.000 வரை உயர்ந்தது. லூதியானாவில் இருந்து புறப்படும் விமானத்திற்கான கட்டணங்களும் ரூ.4,301 இல் இருந்து ரூ. 12,987 வரை உயர்ந்தது.
இதையடுத்து டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பெருமளவிலான இளைஞர்கள் கலந்துகொள்ள வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காவல்துறையின் அனுமதியை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 600 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் டெல்லியில் உள்ள முக்கிய தளங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.