இந்தியா

கேரளத்தில் ரேபிஸ் நோய் தாக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சன்ஹா மஹ்ரின் பரிதாபமாக இறந்தாள்.

கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே செருத்திருத்தி தாழபுரா கோடம் குன்னம் பகுதியை சேர்ந்த தம்பதி அலி சகாபி-சபியா. இவர்களது மகள் சன்ஹா மஹ்ரின். 6 வயது சிறுமியான அவள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சிறுமி திடீரென மயங்கி விழுந்தாள். இதையடுத்து சிறுமி சன்ஹா மஹ்ரின் வட்டம்பலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். சிறுமி சன்ஹா மஹ்ரின் கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்பைக்குழியில் விழுந்திருக்கிறார். அதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. மற்றபடி வேறு எந்தவித பிரச்சினையும் இல்லாத நிலையில் சிறுமி மயங்கி விழுந்திருக்கிறார். அவளுக்கு வேறு எதுவும் தொற்று இருக்கிறதா? என்று ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சன்ஹா மஹ்ரின் பரிதாபமாக இறந்தாள். சிறுமியின் சாவுக்கான காரணம் குறித்து சரியான விவரங்கள் தெரியாததால் இயற்கைக்கு மாறான மரணமாகவே கருதப்படுகிறது.

சிறுமி இறந்ததற்கான காரணத்தை கண்டுபிடிக்க சிறுமியின் உமிழ்நீர் மற்றும் கண் கசிவு ஆகியவை சேகரிக்கப்பட்டன. அவை பரிசோதனைக்காக திருவனந்த புரத்தில் உள்ள மாநில பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனையில் சிறுமிக்கு வெறிநாய் கடி தொற்றான ரேபிஸ் பாதிப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அதன் காரணமாகவே உடல்நலம் பாதித்து சிறுமி சன்ஹா மஹ்ரின் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.