உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கிச் சென்ற தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் சென்ற 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ட்ரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான VT-HCX ஹெலிகாப்டர் விமானி மற்றும் 5 பயணிகளுடன் இன்று மதியம் 1 மணியளவில் பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கி புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அதாவது மதியம் 2:20 மணியளவில் சமோலி மாவட்டத்தின் ஜோஷிமத் பகுதியில் உள்ள சாயி கிராமத்தில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
தொடர்பு துண்டிக்கப்பட்ட உடனேயே, அந்த ஹெலிகாப்டரை கண்டுபிடிப்பதற்காக மேலும் இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் இந்திய ராணுவம், உள்ளூர் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை, மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் அடங்கிய கூட்டு மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மீட்புப்பணியில் அனைவரும் உடல்களாகவே கண்டெடுக்கப்பட்டனர்.
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து நடந்த சமயத்தில் அந்தப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு, மழை மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக மோசமான வானிலை நிலவியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதிய வெளிச்சமின்மை (மோசமான பார்வை) காரணமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து ஜோஷிமத் பகுதியில் உள்ள ஹாத்தி பர்வத மலையில் மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கேப்டன் ஹிமான்ஷு சபர்வால் (48) டெல்லியைச் சேர்ந்தவர் என்றும், மற்ற பயணிகள் அனைவரும் கர்நாடகவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளிவந்துள்ளது.
இறந்தவர்கள் பிரதாபா பச்சியாலி நீரஜன் (41), அருண் சலுங்கே (44) விபி சங்கர் கவுடா (39) சுதிர் கே(50), மற்றும் எச்.எஸ்.நடராஜா(51) என அடையாளம் காணப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவரான அருண் சலுங்கே, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய காவலர் என தகவல் வெளிவந்துள்ளது.