லட்சத்தீவுக்கு மேற்கே அரபிக்கடலில் 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 526 கிலோ ஹெராயின் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற ஈரானியப் படகு பிடிபட்டுள்ளது.
செப்டம்பர் 25 அன்று இந்திய கடலோரக் காவல்படையின இணைந்து படகை இடைமறித்து மடக்கிப்பிடித்தனர்.
கப்பலை இயக்கிய ஐந்து பாகிஸ்தான் நாட்டினரும் தடுத்து வைக்கப்பட்டதாக கடலோரக் காவல்படை தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், உளவுத் தகவல்களின் அடிப்படையில், கடலோரக் காவல்படையினர் கடல் மற்றும் வான் கண்காணிப்பை மேற்கொண்டு, சந்தேகத்திற்கிடமான அந்த படகை கண்காணித்த பின்னர் லட்சத்தீவின் மேற்கே அதனைத் பின்தொடர்ந்து பிடித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்களில் 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 526 கிலோ உயர் ரக மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் ஆகியவை அடங்கியிருந்ததாக கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
விசாரணைக்காக அந்தக் கப்பல், அதன் பணியாளர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் ஆயுதமேந்திய பாதுகாப்புடன் மும்பைக்கு அழைத்து வரப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டது.
ஐந்து பாகிஸ்தான் நாட்டினர் கைது செய்யப்பட்டதை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நடவடிக்கை குறித்து இன்று பிற்பகலில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்பட உள்ளது.
கடல் மார்க்கமாக நடைபெறும் நாடுகடந்த போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அமைப்புகள் தங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வரும் வேளையில் இந்தப் பறிமுதல் நடைபெற்றுள்ளது.
இந்தப் பறிமுதல், சர்வதேச போதைப்பொருள் கும்பல்களின் நிதி வலையமைப்பை சீர்குலைக்கவும், போதைப்பொருட்கள் சீனாவை சென்றடைவதைத் தடுக்கவும் உதவும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.