இந்தியா

ரஷிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய இந்தியர்களில் 51 பேர் உயிரிழப்பு!

139 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு விட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 227 இந்தியர்களில் 51 பேர் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 139 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரஷிய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். கிர்கிஸ்தானில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரி.,

இந்தியக் குடிமக்களை விடுவிப்பது மற்றும் தாயகம் திரும்ப அனுப்புவது தொடர்பான இந்த நிலைமையை மாஸ்கோவில் உள்ள எங்கள் தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

எஞ்சியிருக்கும் நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதை உறுதி செய்வதற்காகவும், அதன் மூலம் இவர்களை விரைவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காகவும், நாங்கள் ரஷியத் தரப்புடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.” என தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்த சிறிது நேரத்திலேயே மிஸ்ரியின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்தன.

சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட, ரஷிய ராணுவப் பிரிவுகளில் துணைப் பணியாளர்களாகப் பணியாற்றி வரும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்குமாறு ரஷியாவிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வாலும் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்னும் ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும், அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இந்தியா தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை குடும்பத்தினருடன் ஒருங்கிணைப்பதற்காக, வெளியுறவு அமைச்சகத்தில் ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஏமாற்றப்பட்ட இளைஞர்கள்

பெரும்பாலான இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் கட்டுமானப் பணி, உணவகப் பணி போன்ற பொதுவான வேலைகளுக்காகவே ரஷியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கட்டாய ஒப்பந்தம்

ரஷியா சென்றடைந்தவுடன் அவர்களது கடவுச்சீட்டுகள் பறிக்கப்பட்டு, போதிய ராணுவப் பயிற்சியின்றி கட்டாயமாக உக்ரைன் எல்லைப் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.

அரசு எச்சரிக்கை

இது போன்ற போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், ஆபத்தான சூழல் நிலவும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.