இந்தியா

குருவாயூர் கோவிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்

காலையும் முன்பதிவு செய்யாமல் ஏராளமான திருமண ஜோடிகள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

கேரளம் மாநிலம் திருச்சூரில் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

மாநில மக்கள் மட்டுமின்றி, வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட மக்களும் இங்கு வந்து தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலுக்கு வந்து ஏராளமானோர் திருமணம் செய்வதும் வாடிக்கை.

அதுவும் ஆவணி மாதங்களில் வரும் முகூர்த்த நாட்கள் இங்கு பிரசித்தம் பெற்றவை. மேலும் மலையாள மாதமான சிங்கத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையாக இன்று அமைந்துள்ளது.

இந்த நாளில் குருவாயூரில் திருமணங்கள் நடத்தப்படுவது சிறப்பானதாக இருக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர். இதனாலேயே இந்த நாளில் குருவாயூர் கோவிலில் திருமணம் செய்ய ஏராளமான ஜோடிகள் வருவதுண்டு.

அதன்படி இந்த ஆண்டும் ஆவணி மாத முதல் முகூர்த்த நாளான இன்று திருமணம் செய்ய ஏராளமான ஜோடிகள் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று வரை 444 ஜோடிகள் திருமணத்திற்கு முன்பதிவு செய்திருந்த நிலையில் இன்று காலையும் முன்பதிவு செய்யாமல் ஏராளமான திருமண ஜோடிகள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த ஜோடிகள், அவர்களது உறவினர்கள் என பலரும் கோவிலுக்கு வந்ததால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலில் அதிகாலை 4.10 மணிக்கு திருமணங்கள் தொடங்கியது.

முதல் 2 மணிநேரத்திலேயே 137 திருமணங்கள் நடத்தப்பட்டன. திருமணங்கள் நடத்தப்படுவதற்காக கோவில் முற்றத்தில் 6 மண்டபங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த மண்டபங்களில் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 60-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து வைபவங்கள் நடைபெற்று வந்ததால் கோவிலில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இதுதொடர்பாக குருவாயூர் கோவில் தேவஸ்தான தலைவர் கோபிநாத் கூறுகையில்,"குருவாயூரில் இன்று 437 திரு மணங்கள் நடைபெற்றுள்ளன.

குருவாயூர் கோவில் வரலாற்றில் முதல்முறையாக இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் தற்போது தான் நடை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கோயிலில் கூட்ட நெரிசலைத தவிர்ப்ப தற்காக, மணமக்களுடன் வருபவர்களின் எண்ணிக்கையை 24-ஆக கட்டுப்படுத்தப பட்டுள்ளது என்றார்.