இந்தியா

4 கி.மீ., ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட யானைக்குட்டியை ஆபத்தான சூழலில் இருந்து மீட்ட மீனவர்கள்

ஆற்றின் பலத்த நீரோட்டத்தில் சிக்கி, ஒரு சிறிய யானை குட்டி கூட்டத்தில் இருந்து பிரிந்து அடித்து செல்லப்பட்டது.

படகில் வந்த 5 மீனவர்கள், தண்ணீரின் வேகத்தில் இருந்து யானை குட்டியை பாதுகாக்க ஆற்றில் குதித்து ஆபத்தான சூழலிலும் யானைக்குட்டியை தங்களது சிறிய படகில் ஏற்றினர். பின்னர் அவர்கள் படகின் அருகிலேயே நீந்தியபடி, அதனை பத்திரமாக மெல்ல மெல்ல கரைக்கு கொண்டு வந்தனர்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு வங்காளத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள கஜோல்தோபா தீஸ்தா தடுப்பணையின் மேல் பகுதியில் 5 யானைகள் கொண்ட கூட்டம் ஆற்றைக் கடக்க முயன்றது.

யானைக்குட்டி

அப்போது ஆற்றின் பலத்த நீரோட்டத்தில் சிக்கி, ஒரு சிறிய யானை குட்டி கூட்டத்தில் இருந்து பிரிந்து அடித்து செல்லப்பட்டது. தீஸ்தா ஆற்றில் சுமார் 4கி.மீ., தூரம் வரை அடித்து செல்லப்பட்ட அந்த யானை குட்டியின் தும்பிக்கை மட்டுமே தண்ணீருக்கு வெளியே தெரிந்த நிலையில், அது மூச்சுவிட முடியாமல் தவித்து கொண்டிருந்தது.

மீனவர்கள்

அப்போது அங்கே படகில் வந்த 5 மீனவர்கள், தண்ணீரின் வேகத்தில் இருந்து யானை குட்டியை பாதுகாக்க ஆற்றில் குதித்து ஆபத்தான சூழலிலும் யானைக்குட்டியை தங்களது சிறிய படகில் ஏற்றினர். பின்னர் அவர்கள் படகின் அருகிலேயே நீந்தியபடி, அதனை பத்திரமாக மெல்ல மெல்ல கரைக்கு கொண்டு வந்தனர். அந்த யானை குட்டி மீட்கப்பட்டவுடன் மீனவரின் கழுத்தை சுற்றி தனது தும்பிக்கையால் கெட்டியாக பிடித்து கொண்டது.

தாய் யானையுடன் சேர்ப்பு

கரைக்கு கொண்டு வரப்பட்ட யானை குட்டியை மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அதனை உடனடியாக ரேஞ்ச் அலுவலகத்திற்கு எடுத்து சென்று மருத்துவ சிகிச்சை அளித்தனர். பின்னர் அதனை தாய் யானையுடன் சேர்க்க தீவிர முயற்சியில் இறங்கினர்.

தாய் யானைகள்

பொதுவாக மனிதர்களின் வாடை நீண்ட நேரம் படும் யானை குட்டிகளை தாய் யானைகள் மீண்டும் தங்களது கூட்டத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்து விடும் என்பதால், இந்த தேடுதல் பணி மிகவும் அவசரமானதாக மாறியது.

வனத்துறை

சுமார் 2 மணி நேரமாக வனத்துறையினரும் அப்பகுதி மக்களும் இணைந்து யானை கூட்டத்தை தீவிரமாக தேடி வந்தனர். இறுதியில், தீஸ்தா ஆற்றின் வறண்ட ஒரு பகுதியில் யானை கூட்டம் தஞ்சமடைந்திருப்பதை அறிந்து வனத்துறையினர் அந்த யானை குட்டியை தடுப்பணையை கடந்து கொண்டு சென்று அதன் கூட்டத்துடன் பத்திரமாக சேர்த்தனர்.

SCROLL FOR NEXT