இந்தியா

ரூ.36.53 கோடி இ-சலான் மோசடி: 3 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் போலீஸ் விசாரணை - ஆந்திர உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!

வழக்கின் விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆந்திராவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான இ-சாலன் வசூலில் ரூ.36.53 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், 3 ஆண்டுகள் ஆகியும் போலீசார் விசாரணையை முடிக்காதது குறித்து ஆந்திர உயர்நீதிமன்றம் தனது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் டிஜிபி உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குண்டூரைச் சேர்ந்த ஷிபி சக்ரவர்த்தி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் அடிப்படையில், தலைமை நீதிபதி லிசா கில் மற்றும் நீதிபதி சல்லா குணரஞ்சன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

குளோனிங் ஆப் மூலம் மோசடி

காவல்துறைக்குத் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வந்த 'டேட்டா எவால்வ் சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனம், தங்களுடைய ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக ஒரு 'குளோனிங் ஆப்' மூலம் வாகன ஓட்டிகளிடம் இருந்து இ-சலான் பணத்தைத் தொடர்ந்து வசூலித்துள்ளது.

கோடிக்கணக்கில் பணம் திசைதிருப்பல்

இவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.36.53 கோடி அரசு கணக்கிற்குச் செல்லாமல், அந்த நிறுவனத்தின் இயக்குநர் அவினாஷ் என்பவரின் தனிப்பட்ட கணக்குகளுக்குத் திசைதிருப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவினாஷ், அக்ஷிதா, ரவிகிரண் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நீதிமன்றம் காட்டிய அதிருப்தி

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஏ. ஜெயந்தி ஆஜராகி, "வழக்கின் விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூடுதல் சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன" என்று விளக்கம் அளித்தார்.

ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு மோசடி வழக்கில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நிலுவையில் இருப்பதை ஏற்க முடியாது என்றனர்.

இந்த மந்தமான விசாரணை குறித்து டிஜிபியின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கவும், வழக்கின் இறுதி அறிக்கை அல்லது குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்யவும் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.