இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சீசனில் 32.50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது.மகரவிளக்கு ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம்(நவம்பர்) 16-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலையணிந்து விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாவதை தடுக்க இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

மெய்நிகர் வரிசை (ஆன்லைன் முன்பதிவு) மூலமாக தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட போதிலும், உடனடி முன்பதிவு மூலமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் 41 நாட்களாக நடந்து வந்த மண்டல பூஜை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இதனால், மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு நேற்று முன்தினம் மாலை தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. அதே அலங்காரத்தில் நேற்று பக்தர்களுக்கு ஐயப்பன் காட்சியளித்தார். கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக நேற்று ஆன்லைன் முன்பதிவு முறையில் 60 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு முறையில் 5 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

மண்டல பூஜை முடிந்து நேற்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. கடந்த 41 நாட்கள் நடந்துவந்த மண்டல பூஜை சீசன் காலத்தில் சபரிமலைக்கு மொத்தம் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே சீசன் காலத்தில் 28 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் சபரி மலைக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4.07லட்சம் பக்தர் கள் அதிகமாக வந்திருக்கிறார்கள். அதேபோல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.28 கோடி வருமானம் அதிகமாக கிடைத்துள்ளதாக தற்காலிக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. அன்று முதல் ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. மகர விளக்கு பூஜை காலத்தில் தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை மண்டல பூஜை காலத்தை போன்றே கடைபிடிக்கப்பட உள்ளது.

மேலும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஜனவரி 13-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களையும், 14-ந்தேதி 40 ஆயிரம் பக்தர்களையும் மெய்நிகர் வரிசை முறையில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்களில் உடனடி முன்பதிவு அடிப்படையில் எத்தனை பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது என்று முடிவு எதுவும் தற்போது எடுக்கப்படவில்லை.