மேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியில் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் புதுப்பிப்புகள் பற்றி மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி எரிபொருள் வினியோகத்தை சீராக்க 5 கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர்களின் வினியோகத்தை அதிகரித்துள்ளது. மானிய விலையில் எல்.பி.ஜி. இணைப்புகள் இல்லாதவர்களுக்கான பற்றாக்குறையை ஈடுசெய்ய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெருக்கடிக்கு முந்தைய பிப்ரவரி மாதம் சுமார் 77 ஆயிரம் 5 கிலோ சிலிண்டர்கள் விற்பனையான நிலையில், கடந்த 3 வாரங்களில் தினசரி விற்பனை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மார்ச் 23-ந் தேதி முதல் 13 லட்சத்துக்கும் அதிகமான 5 கிலோ வர்த்தக சிலிண்டர்கள் விற்கப்பட்டுள்ளன.
இதுபோல குழாய்வழி இயற்கை எரிவாயு (பி.என்.ஜி.) வழங்கும் பணியையும் அரசு துரிதப்படுத்தியுள்ளது. மார்ச் முதல் 4,24,000-க்கும் மேற்பட்ட புதிய பி.என்.ஜி. இணைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக 30,000-க்கும் மேற்பட்ட நுகர்வோர் எல்.பி.ஜி. இணைப்புகளைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் போன்ற வணிகப் பயனர்க ளுக்கான வினியோகத்தைக் குறைத்து வீடுகளுக்கான எல்.பி.ஜி. வினியோகத்தில் அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. உள்நாட்டு எல்.பி.ஜி. வினியோகம் ஒட்டுமொத்தமாக நிலையானதாக உள்ளது என்றும், தட்டுப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வணிக எல்.பி.ஜி. கிடைக்கும் தன்மை, நெருக்கடிக்கு முந்தைய நிலைகளில் சுமார் 70 சதவீதத்துக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, வினியோகத்தை முறைப்படுத்துவதற்காக மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. உர ஆலைகளுக்கான வினியோகமும் சமீபத்திய சராசரி நுகர்வில் சுமார் 95 சதவீதமாக அதிக ரித்துள்ளது.
இது தவிர, சுத்திகரிப்பு நிலையங்கள் போதுமான கச்சா எண்ணெய் இருப்புடன் அதிக பயன்பாட்டில் இயங்கி வருகின்றன என்றும், உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது என்றும் அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது.