தொழில்நுட்பமான சாட்ஜிபிடி தற்போது பலரது அன்றாட பணிகளையும் எளிதாக்கி வருகிறது. இந்த நிலையில் தொழிலதிபர் ஆயுஷ் சுக்லா தனது தந்தைக்கு சாட்ஜிபிடி பயன்படுத்துவது குறித்து கற்றுக்கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
வீடியோவின் தொடக்கத்தில், அவரது தந்தை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்ட தகவலை கணினியில் கைகளால் தட்டச்சு செய்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஆயுஷ், அந்த பணியை சாட்ஜிபிடி மூலம் மிகவும் எளிதாக செய்து முடிக்கலாம் என்று கூறுகிறார்.
இதற்காக சாட்ஜிபிடி-யில் உள்ள ‘+’ குறியீட்டை அழுத்தி, கேமராவை தேர்வு செய்து, நோட்டில் எழுதப்பட்ட தகவல்களின் புகைப்படத்தை எடுக்குமாறு தந்தையிடம் கூறுகிறார். பின்னர் அந்த தகவல்களை அட்டவணை வடிவில் மாற்றும்படி சாட்ஜிபிடியிடம் கேட்கச் சொல்கிறார்.
சில நொடிகளிலேயே கையால் எழுதப்பட்ட தகவல்கள் டிஜிட்டல் அட்டவணையாக மாறியதை பார்த்த அவரது தந்தை ஆச்சரியமடைந்தார். இதுபோன்ற பணிகளை கையால் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் நிலையில், சாட்ஜிபிடி மூலம் சில நிமிடங்களில் முடித்துவிட முடியும் என்பதை அவர் புரிந்துகொண்டார்.
முதல் நாளில் சாட்ஜிபிடியின் செயல்பாட்டை அறிந்துகொண்ட அவரது தந்தை, 2ம் நாளில் மணி கணக்கில் செய்ய வேண்டிய சிக்கலான வேலைகளை, சில நிமிடங்களிலேயே AI மூலம் செய்ய முடியும் என்பதை உணர்ந்தார்.
இதையடுத்து 3-வது நாளில், அவரது தந்தை மிகவும் எளிதாக சாட்ஜிபிடி-யை பயன்படுத்தி தனது பணிகளை செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஆயுஷ், தனது தந்தையை ‘புரோ’ சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில் வல்லுநர் ஆகிவிட்டீர்கள் என பாராட்டினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெற்றோருக்கு புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுப்பது மிகவும் அழகான விஷயம் என்றும், மற்றொரு பயனர், இந்த செயல் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்றும்... இப்படியாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.