உத்தரபிரதேசத்தில் வாலிபரை திருமணம் செய்து கொண்ட 3 பெண்கள். 
இந்தியா

ஒரே வாலிபரை திருமணம் செய்த 3 இளம்பெண்கள்: உத்தரப்பிரதேசத்தில் வினோதம்

சிறுவயது முதல் நாங்கள் மூவரும் ஒன்றாகவே வளர்ந்தோம். திருமணம் எங்களைப் பிரித்துவிடும் என்று தெரிந்தபோது, பிரிந்து வாழ்வதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

உத்தரபிரதேசத்தில் 3 இளம்பெண்கள் ஒரே வாலிபரை ஒன்றாக திருமணம் செய்து கொண்ட வினோதம் நடந்துள்ளது. சிறுவயதில் இருந்தே சேர்ந்து வாழ்வதால் பிரிய மனம் இல்லை என்று மணப்பெண்கள் தெரிவித்து உள்ளனர்.

வீடியோ வெளியிடும் பெண்கள்

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில், 2 உடன் பிறந்த சகோதரிகளும், அவர்களது உறவுப்பெண்ணும் ஒரே வாலிபரை மணந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் உள்ளடக்கங்களை உருவாக்குபராக உள்ளவர் சரோஜ் (வயது 20). இவர் சகோதரி சாவித்ரி ராணி (19) மற்றும் உறவுப்பெண் சந்தோஷ் கடக்வன்ஷி (18) ஆகியோருடன் இணைந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர்களின் வீடியோக்களை கேமராமேன் விகாஸ் சாமுண்டா (20) என்பவர் படம் பிடித்து வந்தார்.

ஒரே ஆணை மணந்தனர்

இந்த நிலையில் அந்த 3 இளம்பெண்களும், கேமராமேனை ஒன்றாக திருமணம் செய்து கொண்ட வினோதம் நடந்துள்ளது. அங்குள்ள கோவிலில் சமீபத்தில் அவர்கள் திருமணம் நடந்துள்ளது. அதுபற்றிய வீடியோக்கள், புகைப்படங்களையும் அவர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். அதில் மணமகன் யாக குண்டத்தில் நெருப்பு வளர்ப்பதையும். 3 மணமகள்களும் அவருடன் சேர்ந்து நெருப்புமூட்டி திருமண பந்தத்தில் இணைவது, மணமகனின் காலை மூவரும் ஒன்றாக தொட்டு வணங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

வாழ்ந்தால் சேர்ந்து வாழ்வோம்

வினோதமான இந்த திருமணம் பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அதுகுறித்து மணப்பெண்களில் ஒருவரான சரோஜ் கூறியதாவது:-

சிறுவயது முதல் நாங்கள் மூவரும் ஒன்றாகவே வளர்ந்தோம். திருமணம் எங்களைப் பிரித்துவிடும் என்று தெரிந்தபோது, பிரிந்து வாழ்வதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பிரிந்து வாழ்ந்தால் தற்கொலை கூட செய்து கொள்ளலாம் என்று சிந்தித்து உள்ளோம். ஆனால் இறப்பதைவிட ஒரே நபரைத் திருமணம் செய்து ஒன்றாக வாழலாம் என்று முடிவு செய்தோம். எங்கள் விருப்பத்தை விகாசிடம் தெரிவித்தோம். அவரும் அதற்கு சம்மதித்தார். நாங்கள் அனைவரும் வயது வந்தவர்கள். இந்த முடிவை எங்கள் விருப்பப்படி எடுத்தோம்.

இவ்வாறு சரோஜ் கூறியுள்ளார்.

திருமணம் செல்லுமா?

மணமகன் விகாசும் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் கூறும்போது, "மூவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பாசத்தை நான் அறிந்திருந்தேன். அவர்கள் பிரிய விரும்பவில்லை. அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்தே இந்த முடிவை ஏற்றுக்கொண்டேன். எங்கள் முடிவை அனைவரும் மதிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்

எனினும், இந்த திருமணம் இந்து திருமணச் சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது குறித்து சட்ட ரீதியான விவாதம் எழுந்துள்ளது. சமூக வலைத்தளத்தில் அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.