கேரளம் மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளில் 92 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி நேரடியாக போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. பிரசாரம் வருகிற 7-ந்தேதி மாலையுடன் முடிவுக்கு வருகிறது.
பிரசாரம் முடிய இன்றுடன் சேர்த்து 4 நாட்களே உள்ளதால் தங்களது கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சசிதரூர் எம்.பி. கேரளம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
அவர் நேற்று மலப்புரம் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இரவு 7 மணியளவில் வண்டூர் அருகே தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை மோட்டார்சைக்கிள்களில் வந்த 5 பேர் அடங்கிய கும்பல் வழி மறித்தது. அவர்கள் காரில் இருந்த சசிதரூர் எம்.பி.யை தாக்க முயன்றார்.
அவர்களை சசிதரூரின் உதவியாளர் தடுத்தார். அப்போது அவரை அந்த கும்பல் தாக்கியது. இதில் சசிதரூரின் உதவியாளர் காயமடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள், தாங்கள் வந்த மோட்டார்சைக்கிள்களிலேயே தப்பிச் சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வண்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில் சசிதரூர் எம்.பி.யை தாக்க முயன்றது மற்றும் அவரது உதவியாளரை தாக்கியது உம்மர் உள்ளிட்ட 5 பேர் என்பது தெரியவந்தது.
அவர்களின் மீது ஜாமினில் வெளியே வரமுடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். அவர்களில் உம்மர் உள்பட 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.