ஞானேஷ் குமார் 
இந்தியா

2006 ஊழல் வழக்கு.. ஞானேஷ் குமார் மீதான விசாரணையை மீண்டும் தொடங்க கேரள அரசு உத்தரவு

தற்கொலைக் குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

2006ல் கேரளாவின் பொதுப்பணித்துறை செயலாளராக இருந்தபோது ஞானேஷ் குமார் மீதான ஊழல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கேரள கேடரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ் குமார், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆவதற்கு முன்பாக மத்திய அமைச்சகங்களுக்கும், மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளில் பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் 2006ல் ஞானேஷ் குமார் கேரளாவின் பொதுப்பணித்துறை செயலாளராக இருந்தபோது கே.எஸ்.டி.பி சாலைப் பணிகள் தொடர்பான ஊழல் வழக்கில், புதிய விசாரணைக்கு கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார்.

ஊழல் பின்னணி

KSTP திட்டத்தின் கீழ் மாநகராட்சி சாலை மேம்பாட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த PATI-BEL கூட்டமைப்பில் பணியாற்றி வந்த மலேசிய சிவில் பொறியாளர் லீ சீ பின், 2006ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவரது தற்கொலைக் குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகளால் ஊழல், நிர்வாகச் சீர்கேடு மற்றும் துன்புறுத்தல் நடந்ததாகவும் அந்தக் குறிப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

லீ சீ பின்னின் தற்கொலைக்குப் பிறகு ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கப்பட்டது.

அப்போது தொடங்கப்பட்ட முதற்கட்ட விசாரணை அரசியல் அழுத்தங்கள் காரணமாக பாதியிலேயே முடக்கப்பட்டு, கோப்புகள் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன் பிறகு, ஞானேஷ் குமார் மத்திய அரசுப் பணியில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சென்றார்.

கோப்புகள் மீட்டெடுப்பு

காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் அளித்த புகாரின் அடிப்படையில் 2006ஆம் ஆண்டு ஞானேஷ் குமாருக்கு எதிராக நடத்தப்பட்ட முதற்கட்ட ஊழல் கண்காணிப்பு விசாரணை தொடர்பான கோப்புகளை கேரள உள்துறை அமைச்சகம் சமீபத்தில் மீட்டெடுத்திருந்தது.

கோப்புகளை மீட்டெடுத்த சில நாட்களுக்குப் பிறகு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணியகத்தின் விரிவான விசாரணைக்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

விளக்கம்

ஞானேஷ் குமார் தற்போது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்தாலும், இந்த குற்றச்சாட்டு அவர் 2006இல் கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய காலத்திற்குரியது என்பதால், இப்பதவிக்கான சட்டப் பாதுகாப்பு இந்த விசாரணைக்குத் தடையாக இருக்காது என உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா விளக்கம் அளித்துள்ளார்.

அழுத்தம்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடைமுறையில் முறைகேடு நடைபெற்றதாகவும், பாஜகவுக்கு சாதமாக ஞானேஷ் குமார் செயல்படுவதாவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில் அவர் தொடர்புடைய பழைய ஊழல் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுவது அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

இதனிடையே ஞானேஷ் குமார் பதவி விலக கோரி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி காட்சிகள் டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல உள்ளன.

மறுபுறம் மும்பையில் சிவாஜி பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமை, காந்தி ஜெயந்தி அன்றி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, ஞானேஷ் குமார் மற்றும் எஸ்ஐஆர் செயல்முறைக்கு எதிராக போராட்டம் நடத்தியது. டெல்லி ஜந்தர் மந்தரிலும் பல்வேறு அமைப்புகள் மற்றும் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அதிஷி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.

SCROLL FOR NEXT