மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ரெஜிநகர் ஆகிய இரு தொகுதிகளிலும் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்தியாவில் ஒரு மக்களவை மற்றும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி மேற்கு வங்க மாநிலத்தில் அதிகபட்சமாக 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேவேளையில், வாக்குப்பதிவு மையத்தில் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆம் ஜனதா வளர்ச்சி கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான ஹுமாயூன் கபீர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதி மற்றும் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் காலை முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர், தமிழகத்தின் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி), அசாமின் நகோன் மக்களவைத் தொகுதி மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ரெஜிநகர் ஆகிய இரு தொகுதிகளிலும் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இதில் ரெஜிநகர் தொகுதியில் ஆம் ஜனதா வளர்ச்சி கட்சி தலைவரும் நவதா தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஹுமாயூன் கபீர் வாக்களித்த பின் காவல் துறையினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
காவல் துறையினர் பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைமுறைகளில் தலையிட்டு முறைகேடு செய்வதாக குற்றம்சாட்டிய அவர், தனது கட்சி அலுவலகத்திற்கு வெளியே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஏற்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து ரெஜிநகர் போலீசார் ஹுமாயூன் கபீரை உடனடியாகக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.