கள்ளச்சாராயம்  
இந்தியா

நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் உயிரிழப்பு

கடந்த வாரமும் 9 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தனர்.

மதுவிலக்கு அமலில் உள்ள நாகாலாந்தில், கடந்த இரண்டு நாட்களில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலந்தில் கடந்த 1990ம் ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது.

அங்கு தற்போது தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியைச் சேர்ந்த முதல்வர் நெய்பியு ரியோ தலைமையில் மக்கள் ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது.

கள்ளச்சாராய மரணம்

இந்நிலையில் துயன்சாங், மோகோக்சுங் ஆகிய இரண்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதில் துயன்சாங் மாவட்டத்தில், 11 பேரும், மோகோக்சுங் மாவட்டத்தில், 8 பேரும் உயிரிழந்தனர்.

உயிரிழப்புக்கு காரணமான மதுவின் மாதிரிகள் தடயவியல் பரிசோதனைக்காக அண்டை மாநிலமான அசாமின் குவஹாத்திக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதில், மெத்தனால் என்ற நச்சு ரசாயனம் கலந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கைது

சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாநில அரசு சார்பில் கூடுதல் மாவட்ட எஸ்.பி., புல்லாங் சாங் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 3,000க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரமும் நாகாலாந்தின் துயென்சாங் மாவட்டத்தில் போலியானது என சந்தேகிக்கப்படும் மதுபானங்களை அருந்தியதாக 9 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

லேபிள் இல்லாத அல்லது சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களை யாரும் குடிக்க வேண்டாம் எனவும், மது அருந்தியபின், தலைசுற்றல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவ உதவியை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT