இந்தியா

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 18 மாத பெண் குழந்தை சுவற்றில் வீசி கொலை

குழந்தையை கொன்ற வம்சி போக்சோ வழக்கில் 2 மாதங்கள் ஜெயிலில் இருந்து தற்போது வெளியே வந்தது தெரிய வந்தது.

விஜயவாடாவை சேர்ந்த ஒரு தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும்,18 மாத பெண் குழந்தையும் இருந்தது. கணவரின் நண்பர் வம்சி அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றார். அப்போது வம்சியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

வம்சி மற்றொரு பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார். கணவரிடம் தன் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு வம்சியின் அறைக்குச் சென்று உல்லாசமாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது குழந்தையுடன் வம்சியின் அறைக்குச் சென்று இருந்தார். அப்போது வம்சியுடன் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்தது. இதில் ஆத்திரம் அடைந்த வம்சி அந்த பெண்ணிடம் இருந்த குழந்தையை பறித்து சுவற்றில் வேகமாக வீசினார்.

இதில் குழந்தை படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் தன்னுடைய மாமியாரிடம் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். மாமியார், மருமகளிடம் குழந்தை எங்கே என்று கேட்டபோது தெளிவற்ற பதிலை கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் குழந்தையை விஜயவாடா முழுவதும் தேடிப் பார்த்தனர். அப்போது வம்சி இறந்த குழந்தையுடன் குளக்கரை அருகே நின்று கொண்டு இருந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வம்சியை கைது செய்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வம்சிடம் விசாரணை நடத்திய போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொலை செய்ததாக தெரிவித்தார்.

குழந்தையை கொன்ற வம்சி போக்சோ வழக்கில் 2 மாதங்கள் ஜெயிலில் இருந்து தற்போது வெளியே வந்தது தெரிய வந்தது. வம்சியின் மீது மேலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.