ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் துவ்வூரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வர் (வயது 19). இவர் நேற்று முன்தினம் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி காசி பேட்டையில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றார்.
விடுதி அறையில் வைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார். சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. சிறுமி வலியால் அலறி துடித்தார். இருப்பினும் ஈவு இரக்கம் இன்றி மீண்டும், மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தார்.
பின்னர் சிறுமியை விடுதி அறையில் விட்டு விட்டு தப்பி சென்றார். அதிக ரத்தப்போக்குடன் சிறுமி வீட்டிற்கு வந்தார். மகள் ரத்தப்போக்குடன் வருவதைக் கண்ட அவரது பெற்றோர் கதறி துடித்தனர்.
இது குறித்து துவ்வூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். போலீசார் விடுதி மேலாளர் மற்றும் ஈஸ்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.