நாட்டில் 14 முதல்-மந்திரிகள், 326 எம்.பி.க்கள் ஆகியோர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி வக்கீல் அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்கில், கோர்ட்டுக்கு உதவுவதற்காக மூத்த வக்கீல் விஜய் ஹன்சாரியா நியமிக்கப்பட்டார். அவர் ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாட்டில் மொத்தம் உள்ள 28 மாநிலங்களில், 14 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு எதிராக அதிகபட்சமாக 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேற்கு வங்காள முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகளும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது 19 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 4 ஆயிரத்து 192 குற்றவியல் வழக்குகள் இருக்கின்றன. மொத்தம் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களில், 251 பேர் குற்றவியல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர். அவற்றில் 170 வழக்குகள், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்கவை ஆகும்.
மொத்தம் உள்ள 233 மாநிலங்களவை எம்.பி.க்களில் 75 பேர் (33 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவற்றில் 40 வழக்குகள், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்கவை ஆகும்.
மாநிலவாரியாக பார்த்தால், கேரளாவின் மொத்த எம்.பி.க்கள் 20 பேரில் 19 பேர் குற்றவியல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர். அவர்களில் 11 பேர் மீது கடுமையான வழக்குகள் உள்ளன.
17 தெலுங்கானா எம்.பி.க்களில் 14 பேர் மீதும், 21 ஒடிசா எம்.பி.க்களில் 16 பேர் மீதும், 14 ஜார்கண்ட் எம்.பி.க்களில் 10 பேர் மீதும், 39 தமிழக எம்.பி.க்களில் 26 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன.
உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், பீகார், கர்நாடகா, ஆந்திரா ஆகிய பெரிய மாநிலங்களின் சுமார் 50 சதவீத எம்.பி.க்கள் குற்றவியல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு, 1.243 குற்றவியல் வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. அதே ஆண்டில் 1,050 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
எம்.பி.. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை விரைவாக விசாரிக்க அவற்றை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிக்க வேண்டும். அந்த வழக்குகளின் விசாரணையை முடித்த பிறகுதான் மற்ற வழக்குகளை தனிக்கோர்ட்டுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் முடிந்த பிறகுதான் மற்ற வழக்குகளை தனிக்கோர்ட்டுக்கு மாவட்ட நீதிபதிகள் ஒதுக்க வேண்டும். அந்த வழக்குகளின் முன்னேற்றத்தை ஐகோர்ட்டுகள் மாதந்தோ றும் கண்காணிக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட ஓராண்டுக்குள் விசாரணை முடிவடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.