பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில் கங்கை ஆற்றில் பயணிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்ததில், 15 வயதுக்குட்பட்ட குறைந்தது 13 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் வர்ஷா சிங்கின் கூற்றுப்படி, மாவட்ட தலைமையகத்தில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரகோபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராம்பூர் ஷியாம்சந்த் கிராமத்தை சேர்ந்த மக்கள், ஆற்றின் மறுபுறம் உள்ள கிராமம் ஒன்றில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது இந்த விபத்து நேரிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
"இந்தப் படகில் 15 முதல் 20 பேர் வரை இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது. துல்லியமான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. இதுவரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; உயிரிழந்தவர்கள் அனைவரும் 15 வயதுக்குட்பட்டவர்கள்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
"மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளூர் நீச்சல் வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஏழு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாட்னாவில் உள்ள என்.எம்.சி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்றும் அவர் கூறினார்.
துணை முதல்வர் சம்ராட் சவுத்ரி இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
ரகோபூர் சட்டமன்றத் தொகுதியின் பிரதிநிதியான ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ், மாவட்ட நிர்வாகத்திடம் பேசி விவரங்களை அறிந்துகொண்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"மீட்பு பணிகளை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளேன். துயரமான இந்த நேரத்தில் என் மக்களுக்கு ஆறுதல் கூற நான் நாளை அங்கு நேரில் செல்வேன்," என்று கூறிய அவர், டெல்லியில் இருந்து திரும்பியதும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திப்பதாக உறுதியளித்தார்.