நேபாளத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பேரழிவுகரமான 'போட் கோஷி' ஆற்று வெள்ளத்தை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியா தரைவழி மற்றும் வான்வழி உதவிகளை அதிகரித்துள்ளது.
தற்போதைய நிவாரண நடவடிக்கைகளில், சிக்கி தவித்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நேபாளத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 108 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
சூழ்நிலை குறித்த தகவலை பகிர்ந்துகொண்ட வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நேற்று (சனிக்கிழமை) இரவு 10:30 மணி நிலவரப்படி 108 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், 40 இந்தியர்களுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதேவேளையில் 598 இந்தியர்கள் சீனாவில் இருந்து நேபாளத்திற்குள் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளதாக உள்ளூர் அரசு தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அப்பகுதியில் உள்ள மற்றவர்களின் நிலை குறித்து பேசிய ஜெய்ஸ்வால், சுமார் 900 இந்தியர்கள் தற்போது சீனாவில் இருந்து வெளியேற காத்திருப்பதாக தெரிவித்தார்.
அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார். இருப்பினும், காணாமல் போனதாக கருதப்படும் 275 இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 128 நபர்களை கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
'எக்ஸ்' தளத்தில் மற்றொரு பதிவில், நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பது தொடர்பான நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்திக்குறிப்பை அவர் பகிர்ந்துகொண்டார். அதில் உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை வழங்கப்பட்டிருந்தன.
மீட்பு பணிகளுக்கு வலுசேர்க்கும் வகையில், 11 டன் அவசர உதவிகளை ஏற்றி செல்லும் இந்திய விமானப்படையின் நான்காவது விமானம் காத்மாண்டுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அறிவித்தார்.
இந்தியாவின் வலுவான உள்கட்டமைப்பு ஆதரவை சுட்டிக்காட்டிய டாக்டர் ஜெய்சங்கர், 230 அடி நீளமுள்ள ஒற்றை பாதை கொண்ட 'மாடுலர் ஸ்டீல்' பாலத்திற்கான உபகரணங்களை ஏற்றி செல்லும் 16 லாரிகள் ஏற்கனவே நேபாளத்தை சென்றடைந்துள்ளதாக தெரிவித்தார்.