டெல்லியில் பேரணி செல்ல முயன்ற 100 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் இன்று கன்னாட் பிளேஸை நோக்கிப் பேரணியாகச் சென்ற குறைந்தது 100 மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்தப் போராட்டத்தை 'Disha' என்ற மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. மாணவர்கள் மின்டோ சாலையிலிருந்து கன்னாட் பிளேஸ் நோக்கிப் பேரணியாகச் சென்றுகொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவர்களை வழிமறித்து மேலும் செல்லவிடாமல் தடுத்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தேர்தல் முறைகேடுகள் மற்றும் எஸ்ஐஆருக்கு எதிராக டெல்லியில் இன்று ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணியின் மாபெரும் பேரணி நடைபெற்ற நிலையில் அதன் மத்தியில் இந்த பேரணியும் நடந்துள்ளது.
இதற்கிடையில், வாக்குத் திருட்டு விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தேசத்துரோகக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படுவார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேரணியில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டத்திலிருந்து தப்பித்துவிடலாம் என்று அவர்கள் நினைக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும் பேசிய அவர், "நரேந்திர மோடி எங்கும் செல்லப் போவதில்லை என்று அமித் ஷா கூறினார், நான் உங்களிடம் சொல்கிறேன், நரேந்திர மோடியால் எங்கும் செல்ல முடியாது; அவர் செல்ல விரும்பினாலும், நாங்கள் அவரை அனுமதிக்க மாட்டோம்." என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மோடியாக இருந்தாலும் சரி, அமித் ஷாவாக இருந்தாலும் சரி, ஞானேஷ் குமாராக இருந்தாலும் சரி, நாங்கள் அவர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட மாட்டோம். நாங்கள் வெறுப்பைப் பரப்ப மாட்டோம், அன்புடன் பணியாற்றுவோம்" என்று அவர் கூறினார்.
தன்னிடம் மதம் பற்றிக் கேட்டால், நாட்டு மக்களின் குரலைக் கேட்கச் செய்வதே தனது மதம் என்று கூறுவேன் இன்றியும் அவர் தெரிவித்தார்.