செய்திகள்

சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடங்கியது

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவும் வகையில் 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது.

தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புத்துறையின் சார்பில் அறிவியல் சார்ந்த உத்திகளையும், சிந்தனைகளையும் இளம் தலைமுறையினர் இடையே பரவலாக்கும் முனைப்புடன் பல்வேறு மாநாடுகளும், பயிலரங்க நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. சிறந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கும், சாதனையாளர்களுக்கும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கி வருகிறது.

அவ்வகையில், மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவும் வகையில் 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் நேற்று (8-ம் தேதி) மாலை தொடங்கியது.

சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன தலைவர் ரெமிபாய் ஜேப்பியார் தலைமை வகித்தார். துணை தலைவர் மேரி ஜான்சன், இணை வேந்தர் மரியஜீனா ஜான்சன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் உருவாக்கம் மற்றும் உதவியுடன் வரும் பத்தாம் தேதிவரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் ஒருங்கிணைந்து நடத்துகின்றன.