செய்திகள்

நடராஜன் உடல் விளாரில் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே இன்று மாலை அடக்கம் செய்யப்படும் - திவாகரன்

சென்னையில் மரணமடைந்த நடராஜனின் உடல் தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே இன்று மாலை அடக்கம் செய்யப்படும் என திவாகரன் தெரிவித்துள்ளார். #RIPNatarajan #Sasikala

தஞ்சாவூர்:

புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று நள்ளிரவு காலமானார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது. அருளானந்தம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 

இதற்கிடையே நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் சிறையில் இருந்து புறப்பட்ட சசிகலா சாலை மார்க்கமாக தஞ்சை சென்று அங்கிருந்து விளார் கிராமம் வந்தடைந்தார். டி.டி.வி தினகரன், புகழேந்தி ஆகியோரும் தஞ்சாவூர் வந்தடைந்தனர்.

இந்நிலையில், நடராஜன் உடல் தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே இன்று மாலை அடக்கம் செய்யப்படும் என சசிகலாவின் சகோதர் திவாகரன் தெரிவித்துள்ளார். #RIPNatarajan #Sasikala #tamilnews