புதுடெல்லி:
தென்மேற்கு வங்க கடலில் இலங்கையை யொட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் கனமழை கொட்டி வருகிறது.
இதற்கிடையே தென் சீனக் கடலின் தெற்கு பகுதியில் சியாம் வளைகுடா மற்றும் மலேசிய தீபகற்பத்தின் கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
கிழக்கு நோக்கி காற்று வீசுவதால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அந்த மான் கடலில் கடந்த 1-ந் தேதி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் காற்றின் போக்கு காரணமாக அது மெதுவாக நகர்ந்து புயலாக மாறியது. இதற்கு ‘டெமிரி’ புயல் என்று கம்போடியா பெயர் சூட்டியுள்ளது.
டெமிரி புயல் வியட்நாம். கம்போடியா, தாய்லாந்து வளைகுடா நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் நாளை தெற்கு வியட்நாம் கரையை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு 48 மணி நேரத்தில் அந்தமான் கடல் பகுதியில் இணையும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெமிரி புயல் காரணமாகவே வங்க கடல் பகுதியில் காற்றின் சுழற்சி கடும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக கடலோர பகுதிகளிலும், இலங்கை, அந்தமான் தீவு பகுதியில் நிலைகொண்டுள்ள மேக கூட்டங்கள் வலுபெற்று அதிக அளவு மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.
டெமிரி புயல் கரையை கடந்த பின்னரே அது வலு இழக்குமா? அல்லது அந்தமான் கடல் பகுதியில் இணைந்து பாதிப்பை ஏற்படுத்துமா என்பது தெரியவரும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.