செய்திகள்

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால் எந்த பலனும் கிடைக்காது: நரேஷ்குப்தா கருத்து

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்தால் எந்த பலனும் கிடைக்காது என்று முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யப் போகிறார்கள் என்று ஒரு தகவல் பேசப்படுகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்து விடுவதால் எதுவும் நடந்து விடப் போவதில்லை. சட்டசபையில் எதிர்க்கட்சி இருந்தே ஆக வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.

விதி இப்படி இருக்கும் போது எதிர்க்கட்சிகள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்தால் அரசியலில் பரபரப்பும் நெருக்கடியும் ஏற்படும். அவ்வளவுதான். சட்டசபை தொடர்ந்து செயல்பட்டு கொண்டுதான் இருக்கும்.

எனவே எதிர்க்கட்சிகள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்து எதிர்ப்பை காட்டுவதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. மீதமுள்ள எம்.எல்.ஏ.க்களுடன் சட்டசபை தொடர்ந்து இயங்கும்.

எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு விவகாரத்தைப் பொருத்தவரை, அது கோர்ட்டுக்கு சென்றுள்ளது. இதில் கோர்ட்டு தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

தேர்தல் கமி‌ஷனை பொருத்தவரை சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தால், அதற்கு நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே முக்கிய பணியாகும்.

இவ்வாறு தமிழக முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.

இதற்கிடையே ஜெயலலிதா மரணம் காரணமாக காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு அக்டோபர் 31-ந்தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும் என்று தெரிய வந்துள்ளது.

18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பால் காலியாகி உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியதிருப்பதால், அதனுடன் ஆர்.கே.நகருக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது.