பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ‘‘பிரிக்ஸ்’’ எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு தடவை சந்தித்து பேசுவது வழக்கம். உலகளாவிய பொருளாதார மேம்பாட்டை மேற்கொள்ள இந்த மாநாட்டில் பேசப்படும்.
கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை கோவாவில் இந்தியா நடத்தியது. அப்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கலந்து கொண்டார்.
இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு சீனாவில் நடைபெற உள்ளது. அந்நாட்டின் சீயமன் நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை சீன அரசு செய்து வருகிறது.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அடுத்த மாதம் சீனா செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தியா- சீனா இடையே பரஸ்பர உறவை மேம்படுத்தும் நோக்கில் அவரது பயணம் அமையும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம் மோடி ஹம்பர்க்கில் நடந்த ஜி-20 மாநாட்டில் பேசுகையில், ‘‘சீன அதிபர் தலைமையில் பிரிக்ஸ் நாடுகளின் முன்னேற்றமும் ஒற்றுமையும் மேலும் வலுப்படும்’’ என்று புகழாரம் சூட்டி இருந்தார். அது போல பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியாவின் பங்களிப்பை சீன அதிபர் பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்தியா, பூடான், சீனா எல்லைகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவமும் சீன ராணுவமும் நேருக்கு நேர் மோதும் நிலையில் நிற்பது பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்திய ராணுவம் 2 வாரத்துக்குள் டோக்லாம் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.