செய்திகள்

எந்த விசாரணையையும் சந்திக்க தயார்: கவர்னர் கிரண்பேடிக்கு நாராயணசாமி சவால்

மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என கவர்னர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.

புதுவை மாநிலத்தில் மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளுக்கு சென்டாக் என்ற அரசின் அமைப்பின் மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.

சென்டாக் அமைப்பின் மூலம் சமீபத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை நடந்தது. இதில், முறைகேடுகள் நடந்துள்ளதாக கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டினார்.

அதோடு மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கவர்னர் நேரடியாக தலையிட்டு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்தார். மேலும் மாணவர் சேர்க்கை விவகாரத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கும் கவர்னர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, “எந்த விசாரணையையும் சந்திக்க தயார்” என பதில் அளித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக சட்டசபையில் விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளேன். அதற்கு பின் ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதுகலை மருத்துவ படிப்புக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்து இருந்தேன்.


அது ஐகோர்ட்டின் தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அதை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம்.

ஐகோர்ட்டில் சென்டாக்குக்கு எதிராக எந்த தீர்ப்பும் வழங்கப்படவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக உள்ளோம். கவர்னர் 71 இடங்களை நாங்கள் தனி யாருக்கு தாரை வார்த்ததாக கூறினார்.

அதேபோல் புதுவை மாநில அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழல் வாதிகள் என்றார். அதை அவர் நிரூபிக்க வேண்டும் என்று நான் கூறினேன். அதை அவர் இன்னும் நிரூபிக்கவில்லை. 10 நாட்கள் ஆகியும் நிரூபிக்காத நிலையில் அவர் என்ன செய்யப்போகிறார்? மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி எங்களை பாராட்டி உள்ளார்.

SCROLL FOR NEXT