விபின் 
செய்திகள்

தேனி காட்டுத்தீயில் பலியான குமரி. என்ஜினீயர் நாஞ்சில் சம்பத்தின் உறவினர்

தேனி காட்டுத்தீயில் பலியான குமரி மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் நாஞ்சில் சம்பத்தின் உறவினர் ஆவார்.

மாலை மலர்

நாகர்கோவில்:

தேனி மாவட்டம் குரங்கணி மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேறும் பயிற்சி பெற சென்றவர்கள் சிக்கினார்கள். அவர்களில் 10 பேர் காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். ஏராளமானவர்கள் படுகாயத்துடன் உயிர் தப்பினர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவர் விபின்(வயது34). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள கம்பெனி ஒன்றியில் வேலை பார்த்து வந்தார். இவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் உண்ணாமலைகடையாகும். விபினுக்கு மலையேறும் பயிற்சியில் ஆர்வம் இருந்ததால் பல்வேறு இடங்களுக்குச் சென்று பயிற்சி பெற்று உள்ளார். இது போன்ற பயிற்சியின் போது கோவையைச் சேர்ந்த என்ஜினீயர் திவ்யா(30) என்பவருக்கும் விபினுக்கும் காதல் ஏற்பட்டு அவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

திருமணத்திற்கு பிறகு கோவை கிணத்துகடவில் உள்ள மாமனாரின் மர அறுவை ஆலை நிர்வாகத்தை விபின் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் தனது மனைவி திவ்யாவுடன் குரங்கணி காட்டு பகுதிக்கு மலையேறும் பயிற்சிக்கு சென்ற போது காட்டுத்தீயில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் விபின் பரிதாபமாக உயிர் இழந்தார். திவ்யா படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தீ விபத்தில் பலியான விபின், டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத்தின் உறவினர் ஆவார். அவருக்கு நாஞ்சில் சம்பத் சித்தப்பா முறையாகும். இந்த நிலையில் நேற்று இரவு விபின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று பிற்பகல் விபின் உடல்தகனம் நடைபெறுகிறது.

திருமணத்திற்கு பிறகு கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் விபின் தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு வந்துச் சென்று உள்ளார். இந்த நிலையில் அவரை பிணக்கோலத்தில் பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது பார்ப்பவர்களை உருக்குவதாக இருந்தது.

மலையேற்ற பயிற்சியில் இருந்த ஆர்வம் காரணமாக விபின் இமயமலை பகுதிக்கு கூட சென்று பயிற்சி பெற்றார் என்று உறவினர்கள் சோகத்துடன் தெரித்தனர். #tamilnews