சென்னை:
தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபைத் தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது.
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனும் வெற்றி பெற்றனர். இருவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு பேரும் வரும் 29-ம் தேதி எம்எல்ஏக்களாக பதவியேற்க உள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. எம்எல்ஏக்கள் இருவருக்கும் சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.