செய்திகள்

நந்தனத்தில் 9 மாடிகளுடன் மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகம்

நந்தனத்தில் 9 மாடிகளுடன் மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகம், அதிகாரிகளுக்கு 70 நவீன வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

மாலை மலர்

சென்னை:

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், மக்களின் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு முதல் ஆலந்தூர் விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- நேரு பூங்கா வரையில் சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட் அருகே 3 மாடிகளுடன் மெட்ரோ ரெயில் டெப்போ அலுவலகம், கட்டுப்பாட்டு அறை, அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்காலிகமாக உயர் அதிகாரிகள் அலுவலகம் செயல்படுகிறது.

சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை தற்போது விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்காக நந்தனம் தமிழ்நாடு கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மைய வளாகத்தில் புதிதாக 9 மாடிகளுடன் பிரமாண்ட ‘மெட்ரோ பவன்’ தலைமை அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரெயில் நிலைய அனைத்து பிரிவு அதிகாரிகளும் இக்கட்டிடத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.

மேலும் உயர் அதிகாரிகளுக்காக 70 நவீன குடியிருப்புகளும் இக்கட்டிடத்தில் கட்டப்படுகிறது. 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இப்பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகம் கட்டுவதற்காக 2015-ம் ஆண்டு சென்ட்ரல் பழைய சிறைச்சாலை வளாகத்தில் இடம் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு 2 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்ததால் கட்டுமான பணிக்கு போதுமான இடம் கிடைக்கவில்லை.

மெட்ரோ ரெயில் திட்டம் வளர்ச்சி பெறுவதையொட்டி பிரமாண்டமான அலுவலகம், அதிகாரிகள் குடியிருப்புகள் கட்டுவதற்காக நந்தனம் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மைய வளாகத்தில் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடம் எதிர்கால மெட்ரோ ரெயில் திட்ட தேவைகளுக்கு விரிவாக்கத்துக்கு போதுமானதாக அமைந்தது.

2015-ல் டெண்டர் விடப்பட்டு இப்பணிகள் நடந்து வருகிறது. 2018 ஜூன் மாதத்துக்குள் இந்த பணிகள் நிறைவு பெறும் மெட்ரோ ரெயில் இனைத்து பிரிவு அதிகாரிகளும், ஊழியர்களும் இங்கு ஒருங்கிணைந்து ஓரிடத்தில் செயல்படுவார்கள். எதிர் காலத்தில் மெட்ரோ ரெயில் திட்ட வளர்ச்சி சிறப்பாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.