தஞ்சாவூர்:
தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. ஆனால் இதற்கு மாறாக தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளுக்கு தடை இருக்கிறது. இதனை கண்டித்து வரும் ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் கள் இறக்கும் போராட்டம் நடத்த உள்ளோம்.
ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் பரிசு மற்றும் பணம் வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை விளைபொருட்களை விளைவிப்பவர்களுக்கு திருஓடாக கருதுகிறோம். விவசாயிகளின் தன்மானத்துக்கும், சுய கவுரவத்துக்கும் அரசு சவால் விடுக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை தினசரி அறிவிப்பதுபோல் காவிரியிலும் நாள்தோறும் நீர்பங்கீடு செய்ய வேண்டும். கர்நாடக நீர்தேக்கங்களுக்கு வரும் காவிரி நீரில் கர்நாடகத்துக்கான பங்கை அவர்களின் நீர் தேக்கங்களில் தேக்கி வைத்து கொள்ள வேண்டும்.
தமிழகத்துக்கான ஒதுக்கீட்டு நீரில் ஒரு சொட்டு கூட இவற்றில் தேக்கி வைக்க கூடாது. இந்த நீரை நாள்தோறும் காவிரியில் விட வேண்டும். இந்த நீர் மேட்டூர் அணையில் தேக்கப்பட வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே இரண்டு மாநில மோதலுக்கு முற்றுபுள்ளி வைக்கும். நிரந்தர தீர்வாக அமையும். இதற்காக தமிழகம் மற்றும் புதுவை மாநில அரசுகள் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை திருத்தகோரி மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.