கோப்புபடம் 
செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற மெக்கானிக் உடல் நசுங்கி பலி - 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற மெக்கானிக் உடல் நசுங்கி இறந்தார். இந்த விபத்து காரணமாக 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாலை மலர்

நல்லம்பள்ளி:

குஜராத் மாநிலத்தில் இருந்து பிளைவுட் பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி கோவைக்கு புறப்பட்டது. இந்த லாரியை சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த டிரைவர் சுந்தரம் (வயது 31) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி நேற்று முன்தினம் இரவு தர்மபுரி வழியாக வந்து கொண்டிருந்தது. தொப்பூர் கணவாயில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொப்பூர் சந்தரநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஏசி மேக்கானிக் திருநீலகண்டன் (37) என்பவர் லாரிக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் லாரி டிரைவர் இடிபாடுகளில் சிக்கினார். லாரியில் இருந்த பிளைவுட் சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து டிரைவர் சுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு பிளைவுட்களை அகற்றி லாரிக்கு அடியில் சிக்கி உயிரிழந்த திருநீலகண்டனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் பாளையம் சுங்கச்சாவடி குறிஞ்சி நகர் பகுதியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பின்னர் போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.