செய்திகள்

நீட் தேர்வுக்கு நவோதயா பள்ளிகளை தொடங்குவது தீர்வாகாது: நல்லக்கண்ணு பேட்டி

நீட் தேர்வுக்கும், நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கும் சம்பந்தம் கிடையாது. அதற்கு இது தீர்வாகாது என நல்லக்கண்ணு தெரிவித்தார்.

மாலை மலர்

மதுரை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் நல்லக்கண்ணு மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஏற்கனவே கல்வி முறையில் இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வு தேவையற்றது. இதற்கு எதிராக போராடும் மாணவர்களை கைது செய்வது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கும், நீட் தேர்வுக்கும் சம்பந்தம் கிடையாது. நீட் தேர்வுக்கு நவோதயா பள்ளிகளை தொடங்குவது தீர்வாகாது.

அதிகாரத்துக்காக தமிழகத்தில் ஆட்சியாளர்கள் ஒன்றுமையின்றி பிரிந்து சண்டையிட்டு வருகின்றனர். இதனை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் கால் ஊன்ற பா.ஜனதா முயற்சிக்கிறது. அ.தி.மு.க.வுக்கும், பா.ஜனதாவுக்கும் மறைமுக தொடர்பு இருந்து வருகிறது.

ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அவர்களை அடக்குமுறைகள் மூலம் ஒடுக்கிவிட அரசு முயல்கிறது. போராட்டம் இல்லாமல் கோரிக்கைகள் வெற்றி பெற முடியாது.

பா.ஜனதாவின் எச்.ராஜாவை தமிழக சாரண இயக்கத்தின் தலைவராக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.