சென்னை:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர் நளினி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நானும், என் கணவர் முருகனும் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். சிறையில் எனக்கு ஹரித்ரா என்ற மகள் பிறந்தாள். 2 வயது வரை அவள் என்னுடன் சிறையில் இருந்தாள். அதன் பின்னர், அவரது பாட்டியுடன் லண்டனில் வசித்து வருகிறார். தற்போது அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்.
இதற்காக 6 மாதம் பரோலில் என்னை விடுவிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பினேன். இதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் மற்றொரு கோரிக்கை மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.
சிறை விதிகளின்படி, தண்டனை கைதிகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு மாதம் பரோலில் வெளியில் செல்லலாம். கடந்த 26 ஆண்டுகளாக நான் பரோலில் வெளியில் செல்லவே இல்லை.
அதனால், என் மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காகவும், என் உறவினர்களுடன் கலந்து ஆலோசனை செய்து மாப்பிள்ளை பார்ப்பதற்காகவும், 6 மாதம் பரோலில் என்னை விடுவிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., வேலூர் மத்திய சிறை கண்காணிப்பார் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் எம்.ராதா கிருஷ்ணன், புகழேந்தி ஆஜராகி வாதிட்டார்கள்.
இதையடுத்து மனுவுக்கு ஆகஸ்டு 7ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி, தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை இயக்குனர், வேலூர் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.