பலியான 7-ம் வகுப்பு மாணவர் 
செய்திகள்

நாகர்கோவிலில் 7-ம் வகுப்பு மாணவர் கழுத்தில் சேலை இறுக்கி பலி

நாகர்கோவிலில் தாயாரின் சேலையை மின் விசிறியில் போட்டி விளையாடி கொண்டிருந்த போது சேலை கழுத்தில் இறுக்கி 7-ம் வகுப்பு மாணவர் பலியானார்.

மாலை மலர்

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலயம் அருகே உள்ள முதலியார் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சதீஷ். இவர் நாகர்கோவிலில் உள்ள பைனான்ஸ் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ஆண்டோவிஜி. இவர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கால்நடைதுறை அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றுகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மகன் ஆண்டோசப்ரின் (வயது 12). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். விளையாட்டு மற்றும் படிப்பில் படுசுட்டியாக திகழ்ந்தார். நேற்று விடுமுறை என்பதால் ஆண்டோசப்ரின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.

தனது தாயாரின் சேலையை வீட்டில் இருந்த மின் விசிறியில் போட்டு விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆண்டோசப்ரின் கழுத்தில் சேலை இறுக்கியது. உடனே ஆண்டோசப்ரின் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான ஆண்டோசப்ரின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர்.