சாலை திடீரென உள் வாங்கியதால் ஏற்பட்ட பள்ளத்தையும், அதை சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதையும் படத்தில் காணலாம். 
செய்திகள்

நாகர்கோவில் அருகே சாலை திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு

நாகர்கோவில் அருகே சாலை திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

மேலகிருஷ்ணன்புதூர்:

ஈத்தாமொழி-மணக்குடி கடற்கரை சாலையில் மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சாலை மீனவ கிராமத்தையும், நாகர்கோவில் நகர் பகுதியையும் இணைக்கிறது.

இந்த பகுதியில் சங்குத்துறை பீச், ஈத்தாமொழி, மணக்குடி, நாகர்கோவில் செல்லும் சாலைகள் சந்திக்கிறது. இதனால், மீனவ கிராமத்துக்கு செல்லும் அரசு பஸ்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் என எப்போதும் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டமும் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் இந்த சந்திப்பு பகுதியில் சாலை திடீரென உள் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் பள்ளத்தில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறி சாலையில் ஓடியது. நேரம் செல்லச்செல்ல பள்ளம் பெரிதாகிக் கொண்டே சென்றது.

அந்த பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக பதிக்கப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் பள்ளம் உருவாகி தண்ணீர் வெளியேறியது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் வராததால் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை.

இதுபற்றி அப்பகுதி மக்கள் மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி தலைவர் ராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராஜன், அப்பகுதி மக்களுடன் இணைந்து அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க பள்ளத்தை சுற்றி கற்களை வைத்தும், துணிகளை கட்டியும் தற்காலிக தடுப்பு அமைத்தார்.

மேலும், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரவு வரை பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

முக்கிய சந்திப்பு என்பதால் இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் சாலையில் வரும் போது, பள்ளம் இருப்பதை அறியாமல் விபத்தில் சிக்கி உயிர்பலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பள்ளம் ஏற்பட்டுள்ள சாலையை போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று அந்த பள்ளத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது.