திருவனந்தபுரம்:
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு கேரள அரசு பஸ் ஒன்று நேற்று மாலை புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ் அமரவிளை சோதனை சாவடியில் சென்ற போது சோதனை சாவடியில் இருந்த போலீசார் அந்த பஸ் ஏறி சோதனை செய்தார்கள். அப்போது சந்தேகப்படும் படியாக பயணம் செய்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 5 கிலோ கஞ்சா மற்றும் ஹாசித் என்ற போதை மருந்தும் இருந்தது தெரியவந்தது.
உடனே 2 வாலிபர்களையும் கைது செய்து போதை மருந்துகளை போலீசார் கைப்பற்றினார்கள். அவர்களிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர்களது பெயர் ராகுல்(வயது24), ஆகாஷ்(21) கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களில் ராகுல் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராகவும், ஆகாஷ் திருவனந்தபுரத்தில் டிப்ளமோ படிக்கும் மாணவராகவும் உள்ளது தெரியவந்தது.
பெங்களூருவில் இருந்து தனியார் பஸ் மூலம் இந்த போதை பொருட்களை நாகர்கோவில் கடத்தி வந்துள்ளனர். பின்னர் இங்கிருந்து கேரள அரசு பஸ் மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற போது போலீசாரிடம் அவர்கள் 2 பேரும் சிக்கிக்கொண்டனர்.
இவர்கள் இந்த போதை மருந்துகளை கேரளா மற்றும் வெளி மாநிலங்களுக்கு சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் இவர்கள் யாரிடம் இந்த போதை மருந்துகளை வாங்கினார்கள். பின்னணியில் உள்ள கும்பல் யார்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.