செய்திகள்

ஜூலை 15-க்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்: நாகலாந்து முதலமைச்சருக்கு கவர்னர் உத்தரவு

நாகலாந்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில், முதலமைச்சர் லெய்சீட்சு வரும் 15-ம் தேதிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

நாகலாந்து மாநிலத்தில் முதல்வராக இருந்த நாகா மக்கள் முன்னணியின் ஜெலியாங், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு நாகா இனமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்ததால், ஜெலியாங் பதவி விலக நேரிட்டது. பின்னர், புதிய முதல்வராக நாகா மக்கள் முன்னணியின் தலைவர் லெய்சீட்சு பிப்ரவரி மாதம் பதவியேற்றார். அவர் எம்.எல்.ஏ.வாக இல்லாததால், 6 மாதங்களுக்குள் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக தேர்வு செய்யப்படவேண்டும்.

இதற்காக அவரது மகன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவரது தொகுதியான வடக்கு அங்காமி-1 தொகுதியில் வரும் 29-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்று லெய்சீட்சு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, முன்னாள் முதல்வர் ஜெலியாங் திடீரென ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். மொத்தம் உள்ள 59 எம்.எல்.ஏ.க்களில் தனக்கு 41 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக அவர் கூறியதால், மாநிலத்தில் மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, முதலமைச்சர் லெய்சீட்சு வரும் 15-ம் தேதிக்குள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் பி.பி.ஆச்சார்யா உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT