செய்திகள்

வட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் நாளை முக்கிய பேச்சுவார்த்தை

அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்திய வட கொரியா அதிபர் கிம் ஜான் அன் இன்று ரெயில் மூலம் ரஷியா வந்தடைந்தார். விலாடிவோஸ்ட்டோக் நகரில் புதினுடன் நாளை முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். #NorthKorea

மாலை மலர்

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சந்தித்து பேசிய பிறகு, வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ? என்கிற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து பேசி தீர்வுகாண 3-வது சந்திப்புக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
 
இதற்கிடையே, வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னும் ஏப்ரல் 25-ம் தேதி ரஷியாவின் விலாடிவோஸ்ட்டோக் நகரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் தனது சிறப்பு ரெயில் மூலம் சுமார் 9 மணிநேரம் பயணித்து (ரஷியா நேரப்படி சுமார் 11 மணியளவில்) விலாடிவோஸ்ட்டோக் நகரை வந்தடைந்தார்.

ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்-னும் நாளை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.