சென்னை:
சென்னை-பெங்களூர்- மைசூர் இடையே அதிவேக ரெயில் இயக்குவதற்கான திட்டம் நேஷனல் ஹை ஸ்பீடு ரெயில் கார்பரேசன் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான ஆய்வுப்பணி மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. 435 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த வழித்தடத்தில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்க திட்டமிடப்படுகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான இடம், தொழில்நுட்பம், பாதை வழிவமைப்பு, செலவினம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான பணி தொடங்கி உள்ளது. அதிவேக ரெயில் இயக்கப்படும்போது சென்னை-மைசூர் இடையே 2 மணிநேரம் பயண நேரம் குறைகிறது.
இந்த வழித்தடத்தில் ரெயில்சேவையை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள், திட்டப்பணி மதிப்பீடு நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றை ஆய்வு செய்வதற்கான டெண்டர் இந்த மாதம் இறுதியில் இறுதி செய்யப்படுகிறது.
ஆய்வு பணி முடிந்து இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். வாரியம் இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு தான் இந்த பணி தொடங்கும். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில, மத்திய அரசு எடுத்து செயல்படும்.
இந்த அதிவேக ரெயில்பாதை திட்டம் ஏற்கனவே உள்ள மற்றும் செயல்படுத்த உள்ள பாதையில் நிறுவப்படும். உயர்மட்ட பாதையிலும் சுரங்கப்பாதை வழியாகவும் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பெரிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரெயில் சேவை திட்டமிடப்படுகிறது. வணிக மற்றும் பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் அதிகம் நடைபெறும் நகரங்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வனப்பகுதி, ஆறுகள் உள்ள இடம் ஆகியவற்றை ஆய்வு செய்து அந்த இடங்களில் ரெயில் பாதைக்கான செலவினம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு செல்படுத்த திட்டமிடப்படுகிறது. 2 வழித்தடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு 50 முதல் 60 மீட்டர் அகலமுள்ள நிலம் தேவைப்படும். பல லட்சம் ஏக்கர் நிலம் இத்திட்டத்தை செயல்படுத்த கையகப்படுத்த வேண்டி வரும்.
அதிவேக ரெயில் சேவை மூலம் 50 சதவீதம் பயண நேரம் குறையும். சென்னையில் இருந்து பெங்களூருக்கு 6 மணி நேரம் என்றால் 3 மணி நேரத்தில் செல்ல முடியும். சதாப்தி எக்ஸ்பிரஸ் 7 மணி நேரத்தில் மைசூர் சென்றடைகிறது. அதிவேக ரெயில் மூலம் 3½ மணி நேரத்தில் மைசூர் சென்றடைய முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிவேக ரெயில் திட்டம் மும்பை-புனே- ஐதராபாத் (711 கி.மீட்டர்), டெல்லி- வாரணாசி (365 கி.மீட்டர்), டெல்லி-அகமதாபாத் (886 கி.மீட்டர்), டெல்லி-அமிர்தசரஸ் (459 கி.மீட்டர்) மற்றும் மும்பை-நாசிக்- நாக்பூர் (753 கி.மீட்டர்) ஆகிய நகரங்களுக்கு இடையே செயல்படுத்த முடிவு செய்யப்படுகிறது.