செய்திகள்

கரூர் அருகே மர்ம பொருள் வெடித்து சிதறி பள்ளி மாணவன் படுகாயம்

கரூர் அருகே மர்மபொருள் வெடித்து சிதறியதில் பள்ளி மாணவன் பலத்த காயமடைந்தான்.

மாலை மலர்

கரூர்:

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள தென்னிலை அமிர்தபுரியை சேர்ந்தவர் அழகேசன். இவர் போர்வெல் லாரியில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் விமல்குமார் (வயது 9). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த அவன், வீட்டின் அருகே குப்பையில் கிடந்த ஒரு மர்ம பொருளை எடுத்து அதனை சுத்தியலால் அடித்துள்ளான். அப்போது அந்த மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் விமல் குமாரின் வலது கண் மற்றும் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவனை பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு தென்னிலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு விமல்குமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தென்னிலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விமல்குமார் சுத்தியலால் அடித்ததில் வெடித்த மர்ம பொருள் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பயன் படுத்தப்படும் பேட்டரி என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #tamilnews