செய்திகள்

திருச்செங்கோட்டில் பெண் கொடூர கொலை- மர்மநபர்கள் வெறிச்செயல்

திருச்செங்கோட்டில் நேற்று இரவு வீட்டில் தூங்கிய பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

திருச்செங்கோடு:

திருச்செங்கோட்டில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, சாலபாளையம், பூச்சாரிகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 46). விசைத் தறிதொழிலாளி. இவர், நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் வீட்டின் முன்பக்க முற்றத்தில் பாய் விரித்து படுத்து தூங்கி கொண்டிருந்தார். இதை அறிந்த மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து ராஜலட்சுமியின் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கினர்.

அப்போது அவர் சத்தம் போட்டு விட்டால் அக்கம், பக்கத்தில் குடியிருந்து வருபவர்கள் எழுந்து ஓடி வந்து விடுவார்கள். மாட்டிக் கொள்வோம் என கருதி முன்னதாக ராஜலட்சுமியின் வாயை இருக்கமாக பொத்தி உள்ளனர். பின்னர் கை, கால்களையும் இறுக்கமாக பிடித்து கொடூரமான முறையில் தாக்கியதாக தெரிகிறது. இந்த கொடூர தாக்குதல் காரணமாக அவர் மயக்கம் அடைந்தார்.

இதனால் ராஜலட்சுமி இறந்து விட்டதாக நினைத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இன்று காலையில் படுகாயத்துடன் ராஜலட்சுமி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு வாகனத்தில் ஏற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிறிது நேரத்திலேயே ராஜலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு டி.எஸ்.பி. சண்முகம் மற்றும் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாரதி மோகன் ஆகியோர் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாயை மோப்பம் பிடிக்க போலீசார் ஏவி விட்டனர். அது கொலை நடந்த இடத்தை சுற்றி, சுற்றி மோப்பம் பிடித்தப்படி ஓடி வந்தது. பின்னர் வீட்டின் பின்புற பகுதியை நோக்கி கொஞ்சம் தூரம் ஓடியது. மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகியிருந்த தடயங்களை ஆய்வு செய்தனர்.

கொலையுண்ட ராஜலட்சுமிக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார். ஆகவே தாயார் நள்ளிரவு நேரத்தில் கொலை செய்யப்பட்டபோது மகன் கண்ணன் வீட்டில் இருந்தாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த கொலை சொத்து, நகை, பணத்துக்காக நடந்ததா? அல்லது முன் விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் குற்றப்பிரிவு போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.